மதுரை ஆதரவற்றோர் முகாமில் காணாமல் போன குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு மனநலம் குன்றிய, ஐஸ்வர்யா என்ற பெண்ணும், அவரது 3 குழந்தைகளும் 4 மாதங்களாக தங்கியிருந்தனர். ஐஸ்வர்யாவின் ஒரு வயது மகன் மாணிக்கத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 11ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக போலி சான்றிதழை காட்டியுள்ளனர். ஐஸ்வர்யாவை அந்த இல்லத்தில் அனுமதித்த சமூக ஆர்வலர் இதுகுறித்து விசாரித்தபோது, சான்றிதழ் போலி என்பது தெரிவந்தது. இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகார் அளித்தார். ஆட்சியர் உத்தரவை அடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், வட்டாச்சியர், காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது போலி ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தொண்டு நிறுவன இயக்குநர் சிவக்குமாரை தேடினர்.
இந்நிலையில், ஸ்ரீதேவி என்ற பெண்ணின் தனம்மாள் என்ற 2 வயது குழந்தையும் மாயமானதாக புகார் கூறப்பட்டது. போலீசார் அதுகுறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது, உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்ட மாணிக்கம் என்ற ஒரு வயது குழந்தை, இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இறந்துவிட்டதாகக் கூறி ரூ.5 லட்சம் ரூபாய்க்கு அந்த குழந்தையை விற்றுள்ளனர். தல்லாகுளம் போலீசார், அந்தக் குழந்தையை உயிருடன் மீட்டு, இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இரண்டாவதாக காணாமல் போன தனம்மாள் என்ற 2 வயது குழந்தையை தேடி, கல்மேடு பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்தக் குழந்தையும் மீட்கப்பட்டது. அந்தப் பெண்குழந்தையும் விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







