போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – முடிந்ததை செய்வோம் என்றும் உறுதி!

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரி 16 நாட்களாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 4, 7, 8-ஐ சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த 16 நாட்களாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆனந்த், “முதலமைச்சர் உங்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்துகொள்ள எங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், இந்த ஆட்சி அப்படி இல்லை. உங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டார்கள். அந்த கஜானாவை மீண்டும் அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் பணத்தை யாரும் தொடாத வகையில் பாதுகாத்து வருகிறோம். கலந்து ஆலோசித்து, உங்களுக்கு எந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியுமோ, அதை முதலில் செய்வோம். உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு சங்கடமாக உள்ளது. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு நாங்கள் செய்யப் போகிறோம்? இது உங்கள் அரசாங்கம். தற்போதுள்ள நிலையில் என்னென்ன செய்ய முடியுமோ, அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். நீங்கள் எந்தக் கவலையையும் எதிர்கொள்ளத் தேவையில்லை. இது உங்களுடைய அரசாங்கம். உங்களை நீங்கள் வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அதற்காகத்தான் முதலமைச்சர் வருத்தப்பட்டார். ஒவ்வொரு கட்டமாக உங்களுக்கு தேவையான வசதிகளை நாங்கள் செய்வோம்” என்றார்.

அடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “போராட்டம் என்று என்னை அழைத்தீர்கள். ஆனால், இது மாநாடு மாதிரி தெரிகிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே தவிர, அமைச்சர்களாக இல்லை. ஒரு ராணுவக் கட்டுப்பாட்டோடு போராட்டம் நடத்திய உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கஜானா காலியாகிவிட்டது என்று அமைச்சர் ஆனந்த் சொன்னார்; கஜானா காலியாகவில்லை, காணாமல் போய்விட்டது. ஆனால், மனிதாபிமானம், கருணை, மனசாட்சி காணாமல் போகவில்லை. போராடுவது உங்கள் உரிமை; நிறைவேற்றுவது எங்கள் கடமை” என்றார்.

இதனையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அனைத்து பிரச்சினைகளையும் உணர்வுபூர்வமாகப் பார்க்கிறோம். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனைச் சரி செய்ய வேண்டும். நீங்கள் இங்கு போராடிக்கொண்டிருக்கும்போது எங்களுக்கும் முதலமைச்சருக்கும் அங்கு தூக்கம் இல்லை. அதிகாரிகளிடம், கடந்த ஆட்சி போல் இரவோடு இரவாகக் கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினோம். முதலமைச்சர் கூறியிருக்கிறார், ஒருவர் மீதும் கை வைக்கக்கூடாது என்று. போன ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள்; இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்கள் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். முதற்கட்டமாக என்ன செய்ய முடியும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.