“தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” – தைலாபுரத்தில் அறிவிப்பு பலகை!

தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம் பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து முரண்பாடு காரணமாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலையில் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், “உங்களுக்கு நல்ல செய்தியை சொல்கின்றேன். இன்று முதல் அரசியலில் இருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, பல்வேறு கட்சி நிர்வாகிகளும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து வருகின்றனர். அப்போது அவர்கள் ராமதாஸிடம் அரசியல் பேச முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது தைலாபுரம் இல்லத்தின் நுழைவாயில் கதவு முன்பு “அரசியல் துறவறம்” என்ற தலைப்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாஸை சந்திக்கலாம் என்றும், மேலும் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் ராமதாஸை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.