உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திமுக இலக்கிய அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைமைச்செயலகம் வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் அவரது இருக்கையில் அமர வைத்தனர். இருக்கையில் அமர்ந்து அலுவலக பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இலக்கிய அணி நிர்வாகிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக இலக்கிய அணிச் செயலாளர் வி.பி.கலைராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.