சீர்காழியில் மழை வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, இன்று இரவுக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பாதிப்புகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், சீர்காழி பகுதியில் 200 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. அதில் 120 மின்கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் என்பது மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்படும் என்றார். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட
மாவட்டங்களில் இருந்து 354 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர் இன்று இரவுக்குள் அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் வழங்கப்படும்.
எங்கள் ஆய்வு பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து எங்களிடம் தொடர்பு கொண்டு சேத விபரங்களை கேட்டு வருகிறார். தமிழகத்தில் 14 ஆயிரத்து 400 மின்மாற்றிகளும், இரண்டு லட்சம் மின் கம்பங்களும் இருப்பில் உள்ளது. தற்போது மின்வாரியத்தில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. விரைவில் முதலமைச்சரின் அனுமதி பெற்று காலி பணி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மழையால் சேதம் அடைந்த மின் மோட்டார்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பிடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். ஆய்வின்போது, அவருடன் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் லலிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.








