போரூர் ஏரியிலிருந்து உபரிநீர் செல்ல ரூ.120 கோடியில் பணிகள் – மாநகராட்சி தகவல்

போரூர் ஏரியிலிருந்து உபரிநீர் செல்வதற்காக ரூ.120 கோடியில் பணிகள் நடந்து வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.  சென்னை ஆலந்தூர் 12வது மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம், திருவள்ளூர் நகர் பகுதியில்,…

போரூர் ஏரியிலிருந்து உபரிநீர் செல்வதற்காக ரூ.120 கோடியில் பணிகள் நடந்து வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். 

சென்னை ஆலந்தூர் 12வது மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம், திருவள்ளூர் நகர் பகுதியில், போரூர் ஏரியில் திறந்துவிடப்பட்ட உபரி நீரால், அங்குள்ல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் படகுகள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “போரூர் ஏரியில் உபரிநீர் செல்வதற்காக ரூ.120 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது உபரி நீர் இங்கு திரும்பியதால், இந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் அந்த பணிகள் முடிந்து விடும். அதன் பின்னர் இங்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி,
செய்ய வேண்டிய பணிகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இங்கு உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

இதேபோல் சென்னை தாம்பரத்தை அடுத்த சந்தோசபுரத்தில் இருந்து வேங்கைவாசல் செல்லும் பிரதான சாலையிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சாலையின் இருபுறம் உள்ள நடை பாதைகளில் தனியார் கட்டுமான நிறுவனம் மணல், ஜல்லிகற்கள், கம்பிகளை போட்டு வைத்து இருப்பதால் ஏரிக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டு இருக்கிறது.

இது குறித்து நெடுஞ்சாலை துறை பொறியாளர் காவல்துறையில் புகார் அளித்தும் மணல், ஜல்லிகற்கள் அகற்றப்படவில்லை. நடை மேடையில் கம்பியும் மணலுமாக உள்ளதால் குடியிருப்புவாசிகள் இரண்டு அடி தண்ணீரில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுமான துறைக்கு ஆதரவாக வேங்கைவாசல் பஞ்சாயத்து உப தலைவரும், வார்டு உறுப்பினர்களும் மக்களின் பிரச்னைகளை பின்தள்ளிவிட்டு கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக காவல் நிலையத்தில் சென்று பேசுகின்றனர். கட்டுமான நிறுவனம் எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டடத்தை கட்டிவருகிறது. மின்கம்பிகளுக்கு கீழ் பிளக்ஸ் பேனர் குடிசை, மற்றும் ஆக்கிரமிப்புகளை செய்துள்ளது. ஏரியின் கரையில் பல அடுக்குகளை கொண்ட கட்டடத்தை கட்டிவருகிறது.பொதுபணித்துறையும் இதுபற்றி கண்டு கொள்ளவில்லை. விவசாய நிலத்தில் கட்டப்படும் இந்த கட்டடத்திற்கு விதிகளை மீறி அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் இயற்கையாக செல்ல வேண்டிய தண்ணீர் சாலையில் தேங்கியுள்ளது என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.