227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான் அமையும் என இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார்.
சௌகார்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையில் இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் 27 அம்மாசைகளில் ஆட்சியை பிடிப்போம் என அதிமுக துனை ஒருங்கிணைப்பாளர் இடப்பாடி பழனிசாமி கூறியதை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது.
அப்போது, திமுக சென்னையில் கூட்டணி கட்சிகளுடன் 200க்கு 200 வெற்றி பெறும் எனவும் மீண்டும் மீண்டும் சென்னை மாநகராட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் தன் வசப்படுத்திக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கனவு ஒரு போதும் பலிக்காது, நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 இடங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் கைப்பற்றும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 27 அமாவாசைகள் இல்லை 227 அமாவாசைகள் வந்தாலும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சிதான் அமையும் எனவும் உறுதியாக கூறினார்.
முன்பு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் இடப்பாடி பழனிசாமி தாரமங்கலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடம் உரையாற்றியபோது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது சட்டமன்றத் தேர்தலும் வரும் எனவும், இன்னும் 27 அமாவாசைகள் முடிந்தவுடன் மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இபிஎஸ் உரைக்கு பதிலடு கொடுக்கும் வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.







