தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் அவர்களே புகழும் சூழ்நிலை வரும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையை, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
பெரியார் நகர் அரசு மருத்துவமனையை செப்பனிட, ரூ.6.52 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்ய, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று இந்த மருத்துவமனையில், ரூ. 2 கோடி செலவில் சிடி ஸ்கேன் வசதி, அதிநவீன கருவிகளை வாங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தனியார் நிறுவனம் சார்பில், இந்த மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.4 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ரூ.12 கோடி செலவில் இந்த மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையை புனரமைப்பு செய்யும் போது, தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதற்காக அருகில் உள்ள திருவள்ளுவர் கூட்டுறவு திருமண மண்டபத்தை தேர்வு செய்துள்ளோம். தொடர்ந்து இப்பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு இந்த திருமண மண்டபத்தில் மருத்துவம் பார்க்கப்படும். தற்போது இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளாக 1500க்கும் மேற்பட்டோர் தினமும் மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.
அறநிலையத் துறை சொத்துக்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததற்க்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த ஆட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் அவர்களே புகழும் சூழ்நிலை வரும். ஓராண்டு முடிவு செய்யும்போது எங்களைப் பாராட்டாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்படும் என தெரிவித்தார்.







