திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு. வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி எதிரிலுள்ள காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அப்பகுதியில், நெருக்கமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பனியன் விற்பனை கடைகள் இருந்தன.
காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீயானது 50 கடைகளுக்கு மேல் பரவியது. பனியன் கடைகள் என்பதால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், வேகமாக மளமளவென பரவிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் சென்ற, திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இத்தீவிபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்து பணிகளை முடிக்கிவிட்டனர்.
இந்நிலையில் நிகழ்விடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 50 கடைகள் 3 வீடுகள் 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்திருக்கிறது. தகவல் தெரிந்தவுடன் சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு பணிகளை தீவிர படுத்தினர். நல்வாய்ப்பாக உயிர் சேதமோ , காயமோ இல்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சாமிநாதன், கடை அமைத்திருந்த வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாளைய தினமே கடைகள் அமைத்துக் கொள்ளும் பணி துவங்கப்படும் என்றார். இழப்பீடு குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து தமிழக அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.







