முக்கியச் செய்திகள் செய்திகள்

லாட்டரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் கண்டனம்

லாட்டரி பற்றிய சிந்தனையே திமுக அரசுக்கு இல்லை என எடப்பாடி பழனி சாமிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

’லாட்டரி சீட்டை மீண்டும் தி.மு.க. அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம்’ என்று உண்மைக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று வரலாற்றில் தனி முத்திரை பதிக்கும் பொய் அறிக்கையை வெளியிட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலைமை எத்தகையை சரிவினை – சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி அறிக்கை, 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் சட்டமன்றத்திற்குக் கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தவர் இதே எதிர்கட்சித் தலைவர்தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. கண்ட தோல்வி “மாநில நிதி நிலை” குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது.

நிதித்துறையின் கோப்புகள் பலவற்றை கையெழுத்துப் போடாமல் மூட்டை கட்டி வைத்துவிட்டுச் சென்றார்கள் என்பதை நான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் நேரில் கண்டேன். உயிர் நீத்த காவல்துறையினருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான பேரிடர் ஆணைய நிதி வழங்கும் கோப்புகளைக் கூட மே 2021 வரை கையெழுத்தி டாமல் விட்டுச் சென்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் அந்தக் கோப்புகள் கூட கையெழுத்திடப்பட்டு – உயிர் நீத்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மீது, “லாட்டரி பற்றி ஒரு கற்பனையைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு” எடப்பாடி பழனிசாமி இப்படி களங்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு ஆலோசனைகளிலோ, ஆய்வுக் கூட்டங்களிலோ ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேச்சே இதுவரை எழவில்லை. இன்றைய எதிர்கட்சித் தலைவர் தனது மோசமான ஆட்சியால் நெருக்கடி மிகுந்த நிதிநிலைமையை விட்டுச் சென்றிருந்தாலும் – சிதிலமடைந்த நிதி நிலைமையைச் சரிசெய்யும் கடும் நெருக்கடி மிகுந்த சூழலை இந்த அரசுக்கு ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்தாலும் – மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே இந்த அரசுக்கு இல்லை.

எதிர்கட்சித் தலைவருக்கு என்று கண்ணியம் இருக்கிறது. அதை அவர் நினைவில் கொள்ளவேண்டும். எங்கள் முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அந்தப் பொறுப்புக்குரிய மரியாதையை எப்படிக் காப்பாற்றினார் என்பதை எடப்பாடி பழனிசாமி சற்று நினைத்துப் பார்க்கவேண்டும். எனவே, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் – மாநில நிதி நிலைமையைச் சீர்படுத்தவும் மாண்புமிகு முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சித் தலைவரிடம் ஏதாவது ஆக்கபூர்வமான கருத்துகள் இருந்தால் வழங்கலாம். அதைவிடுத்து கற்பனையான கதைகளை அறிக்கையாக வெளியிட்டு – திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்குச் செய்து கொண்டிருக்கும் நற்பணிகளைத் திசை திருப்பும் வேலையில் எதிர்கட்சித் தலைவர் ஈடுபடுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல.

இவ்வாறு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிபிஎம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Halley Karthik

மத்திய பட்ஜெட் 2023 – விலை உயரும், விலை குறையும் பொருட்களின் முழு பட்டியல்

Web Editor

மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!

Gayathri Venkatesan