இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வி கண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் அறிமுக வீரர்களாக பிருத்வி ஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் வருண்
சக்கரவர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிற பிருத்வி ஷாவுக்கு இதுதான் முதல் டி-20 போட்டி.
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். சந்தித்த முதல் பந்திலேயே பிருத்வி ஷா ஆட்டமிழந்தார்.
அடுத்து சஞ்சு சாம்சன் வந்தார். அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய அவர் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கருணாரத்னே பந்துவீச்சில் பண்டாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சூரியகுமாருடன் ஹர்திக் பாண்ட்யா இணைந்தார். 34 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் சூரியகுமார் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 127 ஆக இருந்தது.
அடுத்து ஹர்த்திக்குடன் இஷான் கிஷன் இணைந்தார். கடந்தப் போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஹர்த்திக் இந்தப் போட்டியில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்தால், 10 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இறுதிக் கட்டத்தில் 14 பந்துகளில் 20 எடுத்தார் இஷான் கிஷன். இதனால் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை தரப்பில் துஷமந்த சமீரா, வசந்து ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இலங்கை அணி, தனது பேட்டிங்கை தொடங்கியுள்ளது.