நம்ம ஊரு சூப்பர் திட்ட பேனர் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.
நம்ம ஊரு சூப்பர் திட்ட பேனர் அச்சடிக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கு பதிலளித்து இருந்தார்.
இந்த நிலையில் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அரசின் மீது முதலமைச்சராக இருந்தவர், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை கூறியுள்ளார். ஒரு பேனருக்கு ரூ.7,906 செலவு என கூறுவது முற்றிலும் தவறு. ஒரு பேனருக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது. விளம்பர பேனர் அச்சிடும் பணிகளில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
அதிமுக ஆட்சியில் பேனர்களில் ஊழல் செய்துள்ளதாகவும் விமர்சித்த அவர், “ரூ.500 பல்பிற்கு ரூ.5,000 பில் போட்டது எடப்பாடி பழனிசாமி அரசு. பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் மெய்யாக மக்களிடம் சேர்ந்துவிடும் என கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஊழல் செய்வதையே முழு நேரமாக செய்து வந்தவர்கள் அவர்கள்” என்றார்.
மேலும், “பொருந்தாத குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மூலமாக சொல்லச் சொல்லி கூடவே இருந்து அவருக்கு குழி பறிக்கிறார்கள். ஜேப்படி திருடர்கள் அப்பாவிகளை கைகாட்டிவிட்டு தப்பி விடுவார்கள். தாங்கள் நிரபராதிகள் என காட்டிக்கொள்வதற்காக இந்த அரசு மீது கைகாட்டுகிறார்கள். ஆளுநரிடமிருந்து எதுவும் கேட்கப்படவில்லை. அதிமுகவை சார்ந்தவர்களே உள்ளாட்சித் தலைவர்களாக உள்ளனர். அவர்களிடமே எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கலாம். அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளது. அலுவலர்களுக்கு தேவைகள் உள்ளது” என்றும் கூறினார்.







