தவறான தகவல்களை பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

பத்திரப் பதிவின் போது தவறான தகவல்களைப் பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள பத்திரப்பதிவுத் தலைவர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும்…

பத்திரப் பதிவின் போது தவறான தகவல்களைப் பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சாந்தோமில் உள்ள பத்திரப்பதிவுத் தலைவர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பதிவுத்துறையின் தலைவர் சிவன் அருள் மற்றும் முதன்மை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய பின் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த காலங்களில் தவறாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் பத்திரப்பதிவு மேற்கொள்ள முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பத்திரப்பதிவை அதிகப்படுத்துவதற்கும் வருமானத்தை பெருக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை பதிவுத்துறையில் இல்லாத அளவாக கடந்த வாரத்தில் ஒரே நாளில் ரூ.134 கோடிக்கு பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் கூறினார். மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி வரி ரூ.15 ஆயிரம் கோடியில் கடனாக ரூ.10 ஆயிரம் கோடியை பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, மீதமுள்ள நிலுவைத் தொகையை பெறவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதியளித்தார். மேலும், பொதுமக்கள் எளிய முறையில் பத்திரப்பதிவு செய்ய அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தவறான பத்திரங்களைப் பதிவு செய்யும் எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.