இந்திய அணியின் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடிவருகிறது. ஏற்கெனவே 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இளம் பட்டாளங்களை கொண்ட இந்திய அணி, டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று டி20 தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியா மற்றும் இலங்கை அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, இரண்டு அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் இன்று நடைபெறவிருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இரு அணி வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என முடிவு வந்தால் நாளை (28-07-2021) இரண்டாவது டி20 போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








