முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்

அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு…

அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது, மாநிலம் முழுவதும் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. எனினும், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு, வாரயிறுதி ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126ம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராசர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கடந்த 2 வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களும் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள். தமிழக முதலமைச்சர் எடுக்கும் ஊரடங்கு முடிவுகளுக்கு நல்ல வரவேற்பை மக்கள் தருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. அது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இறக்கும் நிலைக்கு செல்லவில்லை எனவும், போடாதவர்களுக்கே பிரச்னை என்றும் தெரிவித்த அமைச்சர், தொற்றின் எண்ணிக்கை பொறுத்து. வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.