கொரோனா நோய் தொற்றுக்கு வீடுகளில் சுயமாக பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு உலக நாடுகளை போலவே இந்தியாவிலும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டில் சராசரியாக 2 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரேனா மூன்றாவது அலை எப்போது உச்சத்தை அடையும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளையும் செலுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 16,29,736 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 9.31 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் 25.66 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். சமீப காலமாக மருந்தகங்களில் கிடைக்கும் கொரோனா சுயபரிசோதனைக் கருவிகளை மக்கள் அதிகமாக வாங்கிப் பயன்படுத்த தொடங்கியுள்ளதை பற்றி எச்சரிக்கை விடுத்தார்.
“மக்கள் சுயமாக பரிசோதனை செய்து கொள்ளும் கருவிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. ஐசிஎம்ஆரின் அறிவுறுத்தலின்படி ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்வது பாதுகாப்பானதாகும் ” எனக் கூறினார். முகக்கவசங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்ற கேள்விக்கு, முகக்கவசங்களின் விலை பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.








