நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஜனவரி தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கியது. அப்போது சில ஆயிரங்களில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து லட்சங்களைத் தொட்டது. தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றை விட 4,171 பேருக்கு இன்று குறைவாக பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,59,168 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.
தற்போது நாடு முழுவதும் 21,87,205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை 7 மணி நிலவரப்படி 161.92 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 525 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,89,409 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.







