தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில், பருவ மழை மற்றும் பேரிடர் கால தாய் சேய் நல சிறப்பு பணிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பன்றிக்காய்ச்சல் தொடர்பாக கேரள மாநில எல்லை மற்றும் கோவையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆளுநர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், நீட் விவகாரத்தை, தமிழ்நாடு அரசு, தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 75 லட்சம் பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடவில்லை, என்றும் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.








