கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் நீண்ட விளக்கமளித்த அமைச்சர் – சட்டப்பேரவையில் சிரிப்பலை!

கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் நீண்ட விளக்கமளித்த
அமைச்சரால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விளையாட்டு அரங்கம் அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அக்கல்லூரியில் சுமார் 1,000 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்குத் தனித்தனியாக விடுதிகள் கட்டித் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 188 கல்லூரிகளில் 115 கல்லூரிகளுக்கு விளையாட்டு மைதானங்கள் உள்ளதாகவும், 73 கல்லூரிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் 14 கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 6 அரசு கல்லூரிகள் என்றும் கூறினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர், உறுப்பினர் கேட்டது விடுதி தொடர்பாகவும் இருப்பதால், அது குறித்து பதிலளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அப்போது அமைச்சர் தொடர்ந்து வேறு விவகாரம் குறித்து பேசத் தொடங்கியதால், அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட விளையாட்டு அரங்கம் தொடர்பாக மட்டுமே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாகவும், அடுத்த கட்டத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் கல்லூரிக்கு அரங்கம் கேட்டுள்ளார். அமைச்சர் அளித்த பதில், “அவசரப்பட்டு யாரும் என்னிடம் கோரிக்கை வைத்துவிடாதீர்கள். இரண்டு, மூன்று முறை யோசித்துக் கேளுங்கள்” என்பது போல் இருந்தது எனக் கூறினார்.

இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.