மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன், அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு – காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை, உடனடியாக திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசிடம் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு…

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை, உடனடியாக திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசிடம் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என்பதால் மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிடுவதற்காக நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மேகதாது அணை எதிர்ப்பு , காவிரி நீர் திறப்பு , பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் துரைமுருகன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; 

கர்நாடக அரசு தமிழ்நாட்டிக்கு தர வேண்டிய 9 டி.எம்.சி தண்ணீரை இந்த மாதம்  வழங்கவில்லை. காவிரியில் இருந்து இந்தமாதம் 12.21 டி.எம்சி தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 9.22 டி.எம்.சி தண்ணீர் கூட கிடைக்கவில்லை. அதனை திறந்து விட உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினேன். காவிரி நீர் திறந்து விடவேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும் தனியாக கோரிக்கை கடிதம் எழுதியுள்ளோம்.

பெண்ணையாறு தீர்பாயம் அமைக்கும் விவகாரத்தில் கூடுதல் கால அவகாசம் கோரினால் அதை வழங்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். அதேபோல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் கூறியுள்ளோம். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளோம். மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் கோரிக்கை விடுத்தோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.