புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகள் அமைக்கும் திட்டம் – அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

கொடைக்கானலில் மண் சரிவை தடுக்க, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டம் வகுக்கப்படும், என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்…

கொடைக்கானலில் மண் சரிவை தடுக்க, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டம் வகுக்கப்படும், என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு திண்டுக்கல் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நெடுஞ்சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூடத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு கூறியதாவது:

151 கிலோ மீட்டர் தூரம் கிராம சாலை திட்டத்தின் கீழ் 167 கிராம சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா தளமான கொடைக்கானல் உள்ளதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அவ்வப்போது ஏற்படும் மண் சரிவை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய புதிய தொழில் நுட்பத்தின் மூலம் தடுப்புகள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்வதற்கு திட்டம் வகுக்கப்படும்.

திண்டுக்கல் நகரின் போக்குவரத்தை குறைப்பதற்காக, திண்டுக்கல் நாகல்நகரில்
இருந்து வெள்ளோடு வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழனி அடிவாரம் முதல் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் வரை ரோப் கார் திட்டம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு துறை அமைச்சகத்தின் சார்பில் வலியுறுத்தப்படும்.

சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்து விபத்தை தடுப்பதற்காகவே சாலையில்
தடுப்புகள் வைக்கப்படுகிறது. வேகத்தை குறைப்பது விபத்தை தடுப்பதற்காகத்தான் என தெரிவித்தார்.

ஸ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.