சட்டப்பேரவையில் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த்!

சட்டப்பேர்வையில் மானிய கோரிக்கைகள் மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜயை அமைச்சர் ஆனந்த் புகழ்ந்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதிலுரை அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“முதலமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது. கடந்த 28, 29 ஆண்டுகளாக முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சினிமாவில் மட்டும்தான் அவர் நடிப்பார். அதைத் தாண்டி வெளியில் வந்து நடிக்கச் சொன்னால், அவருக்கு நடிக்கத் தெரியாது. நான் ஒரு சாதாரண ஆள். பாண்டிச்சேரி என்ற ஒரு சின்ன ஊரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். எனக்கு இங்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, இன்று நான் அமைச்சராக இருக்கிறேன் என்றால், முதலமைச்சர் விஜயைத் தவிர வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது.

சாதி, மதம், பணம் எதுவுமே இந்தத் தேர்தலில் எடுபடவில்லை. முதலமைச்சரின் முகத்துக்காக மக்கள் வாக்களித்து, நாங்கள் வெற்றி பெற்று, இன்று அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். அனைவரும் கூட்டணியாக நிற்கும்போது, நாம் தனியாக நின்று வெற்றி பெறுவோம் என அவர் கூறினார். முதலமைச்சருடன் பழகினால்தான் அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் அவருடன் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.

எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட மாற்றுக் கட்சிக்குச் செல்ல மாட்டார்கள். அவரை வைத்து இயக்கிய ஒரு இயக்குநர், தேர்தலில் இந்தக் குறிப்பிட்ட தொகுதி எனக்கு வேண்டும் எனக் கேட்டார். ஆனால், அதற்கு முதலமைச்சர் மறுத்துவிட்டார். சபாநாயகர் எங்கள் கட்சிக்குக் கிடைத்த வரம். செங்கோட்டையன் எங்கள் கட்சிக்குக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆதவ் அர்ஜுனா எனக்கு கண்டிப்பாக வேண்டும் என முதல்வர் கேட்டார். அவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டதால் அவரை விட்டார்கள். ஆகையால், நாங்கள் எடுத்துக்கொண்டோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.