தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனிடையே, அமைச்சர் ராஜ்மோகன் தொல்லியல் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொல்லியல் துறை சார்ந்த அறிவிப்புகள் பின்வருமாறு:
- தமிழர்களின் பண்பாட்டுத் தளங்களைப் பாதுகாத்திடும் நோக்கத்தில், முதற்கட்டமாக ஐந்தாண்டுகளில் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் “தமிழ் பாரம்பரிய பாதுகாப்பு பணிகள்” கீழ் புனரமைப்பு செய்யப்படும்.
- பண்டைய எளிமையான தமிழர் கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவினை (Artificial Intelligence – AI) பயன்படுத்தி ஒரு தரவுத்தளத்தை உருவாக்கும் பணி ரூ.1.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
- பட்டறைப்பெரும்புதூர் தொல்பழங்கால அகழ்வைப்பகம், குற்றாலம் – நாட்டுப்புற அகழ்வைப்பகம் மற்றும் தருமபுரி நடுகல் அகழ்வைப்பகங்களில் விளக்க உரைப் பணிகள் மற்றும் காட்சிப்படுத்தும் பணிகள் ரூ.12 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
- தொல்லியல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்படும் தொல்பொருட்கள் மற்றும் மாதிரிகளின் அறிவியல் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள, நவீன தொல்லியல் ஆய்வகம் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
- தமிழரின் கடல்வழி வணிகம், துறைமுகம் மற்றும் ஆற்றங்கரைப் பண்பாட்டினை வெளிக்கொணர, ரூ.3 கோடி மதிப்பில் கள ஆய்வுப் பணிகள் 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்.
- தொல்லியல் கள ஆய்வு, அகழாய்வு மற்றும் ஆழ்கடல் அகழாய்வுகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தொடரும் நிதியான ரூ.7.00 கோடி, ரூ.10.00 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தொடரும் நிதியான ரூ.3 கோடி, ரூ.4 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
- தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் உட்கட்டமைப்பு மற்றும் நவீன மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிதி ஆதாரம் ரூ.30 இலட்சம் உயர்த்தி வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த துறை வெளியீடுகளை ஆண்டுதோறும் வெளிக்கொண்டு வர ஏதுவாக, தொடரும் நிதி ஆதாரம் ரூ.30 இலட்சம், ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். உலகத் தரம் வாய்ந்த தொல்லியல் கண்காட்சிகள், உலக மரபு நாள் (ஏப்ரல் 18), உலக மரபு வாரம் (நவம்பர் 25 வரை) ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு தொல்லியல் சார்பான சொற்பொழிவுகள், பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடரும் நிதி ரூ.15 இலட்சம், ரூ.75 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தொல்லியல் சார்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கை உலகத் தரம் வாய்ந்த அளவில் நடத்திட வழங்கப்பட்டு வரும் தொடரும் நிதி ரூ.30 இலட்சம், ரூ.80 இலட்சமாக வழங்கப்படும்.
- புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக புதிதாக 26 நினைவுச் சின்னப் பாதுகாவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.




