பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் தொழில்நுட்பம் காரணமாக தீவிரவாத செயல்கள் தடுக்கப்படுவதால் உலகில் பொதுமக்கள் நிம்மதியாக உறங்க முடிவதாக இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமமான என்.எஸ்.ஓ விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமத்தின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆட்சியாளர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் மொபைல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ சைபர் பாதுகாப்பு குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“உலகநாடுகளில் உள்ள உளவு அமைப்புகள், ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகள் பெகாசஸ் போன்ற மென்பொருட்களை பாதுகாப்புக்காகப் பயன்படுத்துகின்றன.
இதனால், குற்றப்புலனாய்வு, தீவிரவாத வழக்குகள் ஆகியற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. என்.எஸ்.ஓ தவிர பிற சைபர் உளவு நிறுவனங்கள் பெகாசஸ் போன்ற மென்பொருட்களை உலக நாடுகளுக்கு வழங்குகின்றன.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் தேச விரோத கருத்துகள், தேசவிரோத செயல்களை கண்காணிப்பதற்கு உலக நாடுகள் வசம் ஒரு முறைப்படுத்தப்பட்ட தீர்வு ஏதும் இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள ராணுவ, காவல்துறை அமைப்புகளின் பணி மேலும் கடினமாக உள்ளது.இந்த சூழலில்தான் உலக நாடுகள் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்துகின்றன.
இதனால்தான் உலக நாடுகளில் உள்ள மக்கள் நிம்மதியாக தெருக்களில் நடமாட முடிகிறது. இரவில் மக்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது. என்.எஸ்.ஓ-வைப் பொறுத்தவரை நாங்கள் பெகாசஸ் மென்பொருளை இயக்குவதில்லை. அந்த மென்பொருள் சேகரிக்கும் விவரங்களையும் நாங்கள் சேமித்து வைப்பதில்லை. பாதுகாப்பான உலகம் உருவாவதற்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்கின்றோம்.
பெகாசஸ் மென்பொருள தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஐநா உறுதி அளித்த மனித உரிமைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். பெகாசஸ் மென்பொருளை உலகில் எந்த நாடு வாங்கி இருக்கிறது அல்லது யார் உபயோகப்படுத்துகின்றனர் என்பது குறித்த தகவல்களை என்.எஸ்.ஓ எப்போதும் வெளியிடுவதில்லை.”
இவ்வாறு என்.எஸ்.ஓ குழும அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் என்.எஸ்.ஓ குழுமத்தின் பெகாசஸ் மென்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விசாரிக்க இஸ்ரேல் அரசு ஒரு ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது. ஆய்வின் முடிவில் உண்மை தெரியவரும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.









