150 தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள்: ராணுவம்

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் 150 தீவிரவாதிகள் காத்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் 150 தீவிரவாதிகள் காத்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மான்ஷெரா, கோட்லி, முசாபராபாத் உள்ளிட்ட 11 இடங்களில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருவதாக அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், 500 முதல் 700 பேர் வரை பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லைக்கு அப்பால் 150 தீவிரவாதிகள் காத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஊடுருவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ராணுவம் எடுத்துள்ளதாகவும் இதனால், தீவிரவாதிகள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி – பூஞ்ச் பகுதிகள் வழியாகவும், நேபாள் வழியாகவும் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான வாய்ப்புகளை அடைக்கவும் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊடுருவலே இல்லை எனும் நிலையை உருவாக்கிவிட்டதாக கூறவில்லை என தெரிவித்துள்ள ராணுவ அதிகாரி, ஊடுருவுவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.