2019க்குப் பிறகு காஷ்மீர் மக்களின் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், 2019 பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களின் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கம் நடத்தியது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களின் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கோ, தீவிரவாதத்திற்கோ ஆதரவாக இல்லை என்றும் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பது, வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்கள் நடத்துவது என அனைத்தும் தற்போது நின்றுவிட்டதாகத் தெரிவித்த அஜித் தோவல், எனினும் அங்கு சில தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியமர்த்தும் விவகாரத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அஜித் தோவல், எதிர்காலத்தில் இன்னும் அதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.
பாகிஸ்தானுடனான உறவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அஜித் தோவல், அந்நாட்டுடன் இயல்பான உறவு நிலவுவதையே இந்தியா விரும்புகிறது என்றார். ஆனால், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை சகித்துக்கொள்ள இயலாது என அவர் குறிப்பிட்டார்.
அமைதியா போரா என்பதை நமது எதிரி தீர்மானிப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்த அஜித் தோவல், நாம்தான் அதை தீர்மானிக்க வேண்டும் என கூறினார். அதுவும், எங்கே, யாருடன், எத்தகைய நிபந்தனைகளுடன் என்பதை நாம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சீனா உடனான எல்லை பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அஜித் தோவல், சீனா உடனான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருப்பது என்றும், எல்லை விவகாரத்தில் அத்துமீறலை அனுமதிக்க முடியாது என்ற திட்டவட்டமான செய்தியை இந்தியா சீனாவுக்கு கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.









