கொற்றலை ஆற்றில் இறால் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை காத்துவரும் இருளர் இன மீனவ பெண்களின் கோரிக்கைகள் என்ன என்பது பற்றி அவர்களே பகிர்ந்த சுவாரஸ்யங்களை தற்போது பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு 136 கி.மீ நீளமும், 3,757 சதுர கிலோ மீட்டர் கொண்டது. சென்னை நகருக்குள் 16 கி.மீ ஓடுகிற இந்த ஆற்றில், ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது.
இந்நிலையில், கொசஸ்தலை ஆறு செல்லக்கூடிய மீஞ்சூர் அருகே செங்கனிமேடு கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஆற்றில் இறால் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர். இவர்களை அடையாளம் காட்டி நியூஸ் 7 தமிழ் சார்பில் “இவர்கள் தெரிந்த முகம் தெரியாத கதை” என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது. இதில், கொசஸ்தலை என சொல்லக்கூடிய கொற்றலை ஆற்றில் இறால் பிடித்து தங்களது குடும்பத்தை வழிநடத்தி செல்லும் மீனவ பெண்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்கள் ஒளிப்பரப்பட்டது.
இவர்கள் தெரிந்த முகம் தெரியாத கதை லிங்க் : https://www.youtube.com/watch?v=_FUGNiE3KQk
தாங்கள் சிறுவயதில் இருந்தே இந்த கிராமத்தில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு இறால் பிடித்து விற்பனை செய்வதை தவிர்த்து வேறு வேலை கிடையாது என்றும் தெரிவித்தனர். காலையில் 9 மணிக்கு செல்லும் நாங்கள் 10 மணிக்கு தண்ணீரில் இறங்குவதாக அங்குள்ள பெண்கள் தெரிவித்தனர். பின்னர் பிற்பகல் 1 மணி வரை இறால் பிடிக்கும் பணியை மேற்கொள்வதாகவும், பிடித்து வரும் இறால்களை தரம் பிரித்து விற்பனை செய்தவாகவும் கூறினர்.
இந்த பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்கள் உள்ளது. இதில் உள்ள ஒரு சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலப்பதால் இறால்கள் இறந்துவிடுகின்றன. மேலும் அந்த சமயத்தில் நாங்கள் தண்ணீரில் இறங்கும் போது உடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் தங்களுக்கு மாற்று வழியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அதேபோல், தேர்தல் சமயம் மட்டுமே நாங்கள் இருப்பது அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவதாகவும், மற்ற நாட்களில் நாங்கள் கண்டுகொள்ள படுவதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். எங்களின் கோரிக்கைகள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடடிவக்கை எடுக்கவில்லை என்பதால் எதிர்ப்பார்ப்புடன் வாழ்க்கையை நகர்த்தி வருவதாக தெரிவித்தனர்.
காணொலி தயாரிப்பு – கிரி
எழுத்தாக்கம் – இரா.நம்பிராஜன்









