மிக் 29கே ரக போர் விமானம் பயிற்சியின் போது இன்று கோவா கடற்கரை பகுதியில் விபத்துக்குள்ளானது.
கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை மேற்கொண்டது. பயிற்சியை முடித்துக்கொண்டு தளத்திற்குத் திரும்பும்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து விமானியை பாதுகாப்பாக மீட்டனர். விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கடற்படை செய்திதொடர்பாளர் கூறுகையில், மிக் 29கே ரக விமானம், தளத்திற்குத் திரும்பும் போது தொழில்நுட்பக் கோளாறால் கோவா கடலில் விழுந்து நொறுங்கியது. விரைவான மீட்பு பணியின் காரணமாக விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.
மிக் 29கே விமானம் ஒரு அதிநவீன மற்றும் அனைத்து வானிலைகளிலும் செல்லக்கூடிய போர் விமானமாகும். இது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் (சுமார் 2000 கிமீ வேகம்) செல்லக்கூடிய திறன் கொண்டது. இது பூமியிலிருந்து, 65000 அடி உயரத்திற்கு மேல் இந்த விமானத்தால் பறக்க முடியும்.
2020ம் ஆண்டில், இந்திய கடற்படை விமானி நிஷாந்த் சிங், மிக் 29கே பயிற்சியின் போது அரபிக் கடலில் விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







