டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து, ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரபரப்பான ஐபிஎல் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. இரு அணிகளுக்குமே இது கடைசி போட்டி. மும்பை அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், டெல்லி அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்க்கு செல்ல முடியும் என்கிற நிலையில் களமிறங்கியது.
இது ஒருபுறம் என்றால் டெல்லி அணி தோற்றால்தான் ஆர்சிபி அணி பிளே ஆஃப்க்கு செல்லும் என்கிற நிலையும் உருவானது. தங்களது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தபோது, கேப்டன் டூப்ளெசிஸ் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன் என கூறினார். அந்த வகையில் மும்பை அணி வெற்றி பெறுவது அந்த அணியைவிட பெங்களூர் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. டூப்ளெசிஸ் மட்டுமல்லாமல்அந்த அணி ஒட்டு மொத்தமாகவே மும்பை அணியின் ஆதரவைக் கோரியது. மேலும், சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கான ஆதரவைத் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக ஆர்சிபி சார்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு கடிதமும் சமூக வலைதளங்களில் எழுதப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அந்த அணியின் ஆட்டம் தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை அணி சிறப்பாகப் பந்து வீசி டெல்லி அணியைக் கட்டுப்படுத்தியது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோஹித் சர்மாவை இழந்தது. ஆனாலும், அந்த அணியின் இஷான் கிஷன் மற்றும் பிரேவிஸ் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட்டும் அதிரடி ஆட்டத்தைக்காட்ட மும்பை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
மும்பை அணியின் இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதேநேரத்தில், ஆர்சிபி அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. போட்டி முடிந்ததும் பேசிய ரோஹித் சர்மா, ஆர்சிபி அணி மற்றும் பிளே ஆஃப்க்கு தகுதிபெற்றுள்ள மற்ற அணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். ஆர்சிபி அணியும் மும்பை அணிக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளது.
கடைசிப் போட்டியை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் இந்த சீசனில் 10வது இடத்தைதான் மும்பை அணி பிடிக்க முடிந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-இன் செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மும்பை அணியின் பிரேவிஸ் கொடுத்த கேட்சை தவறவிட்டது மற்றும் டிம் டேவிட்டின் கேட்சை ரிவ்யூ செய்யாதது போன்ற செயல்களே டெல்லி அணிக்குத் தோல்வியை கொடுத்துள்ளதாக அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அடுத்த வாரத்தில் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்கவுள்ளன.









