கிளம்பிய எதிர்ப்பு… தகர்த்த ரஜினி… வியந்த எம்.ஜி.ஆர்….

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆரும், ரஜினியும் வசூலிலும், வர்த்தக எல்லையிலும் உச்சம் தொட்டவர்கள். இருவரும் உச்சநட்சத்திர அந்தஸ்தை அடைந்து அதை நீண்டகாலம் தக்கவைத்தவர்கள் என்றாலும், இருவரது பாணியும் முற்றிலும் மாறுபட்டது. எம்.ஜி.ஆர் நடித்த கதாபாத்திரங்கள் முழுக்க…

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆரும், ரஜினியும் வசூலிலும், வர்த்தக எல்லையிலும் உச்சம் தொட்டவர்கள். இருவரும் உச்சநட்சத்திர அந்தஸ்தை அடைந்து அதை நீண்டகாலம் தக்கவைத்தவர்கள் என்றாலும், இருவரது பாணியும் முற்றிலும் மாறுபட்டது. எம்.ஜி.ஆர் நடித்த கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நல்லவனாகவே திரையில் தோன்றும். ஆனால் ரஜினியோ நெகட்டிவ் தன்மை கொண்ட ஹீரோயிஸத்தை படங்களில் வெளிப்படுத்தி புகழ் பெற்றார். வசூலில் ரஜினி படங்கள் படைத்த சாதனைகளையும் அவரது சினிமா மார்க்கெட்டின் உச்சத்தையும் எடுத்துக்கூற பல உதாரணங்கள் உண்டு. எம்.ஜி.ஆரே ரஜினியின் சினிமா மார்க்கெட்டை கண்டு வியந்த சம்பவமும் அதில் அடங்கும்.

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று முக்தா பிலிம்ஸ். கறுப்பு வெள்ளை காலத்தில் தனது தயாரிப்பு பணியை தொடங்கிய முக்தா பிலிம்ஸ் புத்தாயிரம் ஆண்டிலும் அதனை தொடர்ந்தது. சிவாஜியை வைத்து நிறைகுடம்,  அந்தமான் காதலி, கீழ்வானம் சிவக்கும், பரிட்சைக்கும் நேரமாச்சு உள்ளிட்ட படங்களை முக்தா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல், நாயகன் ஆகிய படங்கள் முக்தா பிலிம்ஸ் தயாரித்ததுதான். ரஜினியை வைத்து பொல்லாதவன், சிகப்பு சூரியன் ஆகிய படங்களை முக்தா பிலிம்ஸ் உருவாக்கியது. அந்த இரண்டு படங்களையும் முக்தா பிலிம்ஸ் நிறுவனரான முக்தா சீனிவாசனே இயக்கியும் இருந்தார்.

முக்தா சீனிவாசனின் மகனும் கோடைமழை உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான முக்தா சுந்தர்,  ரஜினியை வைத்து தங்கள் நிறுவனம் தயாரித்த படங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது ரஜினி குறித்த பல்வேறு சுவாராஸ்யமான விஷயங்களை தெரிவித்துள்ளார்.  தனக்கு கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் இருந்தாலும் அதனை மக்களின் ஆதரவோடு முறியடித்து வெற்றி அடைந்தவர் ரஜினி என முத்தாய்ப்பாக கூறும் முக்தா சுந்தர்,  அதற்கு உதாரணமாக பொல்லாதவன் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவகங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

1980ம் ஆண்டு நவம்பர் 6ந்தேதி தீபாவளி வெளியீடாக வந்த படம் பொல்லாதவன். திரைப்படங்களில் ரஜினியை பார்க்கும்போது அவரிடம் வெளிப்படும் எனர்ஜி முக்தா வி சீனிவாசனை கவர்ந்து வந்துள்ளது. இப்படி ரஜினியால் கவரப்பட்ட முக்தா சீனிவாசனுக்கு ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. 1980 ஆண்டு ரஜினியை கதாநாகனாக ஒப்பந்தம் செய்து பொல்லாதவன் பட அறிவிப்பை வெளியிட்டது முக்தா பிலிம்ஸ். படத்திற்கு பூஜைகூட போடவில்லை வெறும் அறிவிப்பு மட்டும்தான் வெளிவந்திருக்கிறது. ஆனால் அதற்குள் படத்தை தங்கள் ஏரியாக்களில் வாங்குவதற்கு விநியோகஸ்தர்களிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் அந்த நிறுவனத்திற்கு வந்தன.  பலர் நேரிலும் அந்த காலத்திலேயே லட்ச லட்சமாக அட்வான்ஸ் கொடுக்க முக்தா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வந்திருக்கின்றனர்.

படத்தின் அறிவிப்பை வெளியிட்டதற்கே இப்படி ஒரு ரெஸ்பான்ஸா என ரஜினியின் மார்க்கெட்டை நினைத்து வியந்திருக்கிறது முக்தா பிலிம்ஸ். இப்படி ரஜினியின் படத்திற்கு சினிமா மார்க்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் சினிமா வட்டாரம், ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருதரப்பினார்,  ரஜினிக்கு ஸ்டைல் பண்ண மட்டும்தான் தெரியும்,  ஸ்டைலை வைத்து எவ்வளவு காலம் ஓட்ட முடியும், அவரது படம் ஓடாது என்றெல்லாம் கூறி பொல்லாதவன் படத்தில் ரஜினி நடிப்பதை தடுக்க முயன்றிருக்கிறனர். ”சினிமா தயாரிப்பை பொறுத்தவரையில் சினிமா பிரமுகர்கள் என்ன சொல்கிறார்கள், ஊடகத்துறையினர் என்னசொல்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கமாட்டோம். வியாபாரத்தைத்தான் பார்ப்போம். வியாபாரத்தை பொறுத்தவரையில் அப்போது ரஜினிக்கு இருந்த மார்க்கெட் வேறு யாருக்கும் இல்லை என்பதால் ரஜினியை வைத்து பொல்லாதவன் படத்தை தயாரிக்க முடிவு செய்தோம்” என பொல்லாதவன் பட நினைவுகளை தெரிவிக்கிறார் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சுந்தர்.

பொல்லாதவன் படத்தை தயாரித்துவந்தபோது முக்தா சீனிவாசனும், அவரது மகன் முக்தா சுந்தரும் எம்.ஜி.ஆரை பார்க்க ஒரு முறை சென்றுள்ளனர். அப்போது அந்த படம் குறித்த பேச்சு வந்த போது ரஜினிக்கு இந்த படத்தில் எவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறீர்கள் என எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். அப்போது அவர்கள்  சொன்ன தொகை எம்.ஜி.ஆரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் சினிமாவில் நடித்தபோது அதிகபட்சமாக வாங்கிய தொகையைவிட 4 மடங்கு அதிகமான தொகையை ரஜினிக்கு பொல்லாதவன் படத்திற்காக ஊதியமாக கொடுத்திருந்தது முக்தா பிலிம்ஸ் நிறுவனம்.

”இவ்வளவு ஊதியம் கொடுக்கிறீர்களே உங்களுக்கு லாபம் வருமா” என்று எம்.ஜி.ஆர் கேட்டபோது, எங்களுக்கு இந்த படத்தில் எக்கச்சக்கமான லாபம் வரும். அந்த அளவிற்கு படத்தின் வியாபாரம் மிகப்பெரியதாக இருக்கிறது என முக்தா சீனிவாசன் பதில் அளித்திருக்கிறார். இதையெல்லாம் கேட்டு வியப்பில் சிறிது நேரம் வாயடைத்துபோனாராம் எம்.ஜி.ஆர்.

பொல்லாதவன் படத்திற்கு முதலில் எரிமலை என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த தலைப்பிற்கு கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைப்பு நெகட்டிவாக உள்ளது. எம்.ஜி.ஆர் உள்ளிட்டவர்கள்  எப்போதும் பாசிட்டவான தலைப்புகளையே வைப்பார்கள் என கண்ணதாசன் கூறியிருக்கிறார். இதையடுத்து தலைப்பை மாற்றவேண்டும் என ரஜினியிடம் கூறும்போது, ஒரு நாள் யோசித்துவிட்டு மறுநாள் ரஜினி கூறிய தலைப்புதான் ”பொல்லாதவன்”. எரிமலை என்கிற தலைப்பைவிட இது மிகவும் நெகடிவ்வாக இருக்கே என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறியபோது இந்த தலைப்பே பவர்புல்லாக இருக்கு இதையே வையுங்கள் என ரஜினி உறுதியாக தனது முடிவில் இருந்திருக்கிறார். இதையடுத்து பொல்லாதவன் என்கிற பெயரையே தாங்கி வந்த அந்த படம் 1980ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ந்தேதி தீபாவளி ரிலீசாக வெளிவந்தது. படம் மிகப்பெரிய வசூலை குவித்து ரஜினி மீது முக்தா பிலிம்ஸ் வைத்திருந்த நம்பிக்கை சரியே என்று காட்டியது.

பொல்லாதவன் படத்தின் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார் முக்தா சுந்தர். ஒருநாள் அன்றைய படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் நள்ளிரவு ரஜினியும் முக்தா சுந்தரும் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, ஸ்டைலை மட்டும் வைத்து தான் ரொம்ப நாள் திரையுலகில் நீடிக்க முடியாது என எழும் விமர்சனங்கள் குறித்து சுந்தரிடம் கேட்டிருக்கிறார் ரஜினி. தொடர்ந்து வெற்றிகள் கொடுத்தால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீடிக்கலாம் என சுந்தர் பதில் அளித்திருக்கிறார். இந்த உரையாடல் முடிந்து மறுநாள் ”நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்…” பாடல் படமாக்கப்பட்டபோது ரஜினி நடிப்பில் தனி எனர்ஜி தெரிந்தது. வெறித்தனமான ஈடுபாட்டோடும் எனர்ஜியோடும் அந்த பாடலில் நடித்தார்.

அந்த ஈடுபாடும், எனர்ஜியும்தான் பொல்லாதவன் படம் வெளிவந்து 40 ஆண்டுகள் கடந்த பிறகும் ரஜினியை உச்ச நட்சத்திரமாகவே வைத்திருக்கிறது. ரஜினியின் சினிமா மார்க்கெட்டும், செல்வாக்கும் எத்தகையது என்பதை தங்கள் நிறுவனம் தயாரித்த நாயகன் படத்தை வைத்தே மற்றொரு உதாரணத்தை சொல்லியிருக்கிறார் முக்தா சுந்தர்.

தீபாவளியை முன்னிட்டு 1987ம் ஆண்டு அக்டோபர் 21ந்தேதி ஒரே நாளில் கமல் நடித்த நாயகன் படமும், ரஜினி நடித்த மனிதன் படமும் வெளியானது. இரண்டுமே பெரும் வெற்றி பெற்ற படங்கள் என்றாலும், விமர்சன ரீதியில் வெகுவாக போற்றப்பட்ட, ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுபப்படும் அளவிற்கு புகழ்பெற்ற நாயகன் படத்தைவிட மனிதன் படம் தமிழ்நாட்டில் அதிக வசூலை அள்ளியது. இந்த தகவலை முக்தா சுந்தரே  கூறியுள்ளார். எதிர்ப்புகளை தகர்ந்தெறிந்தே திரையுலகில் தொடர்ந்து வெற்றிகளை குவித்துவந்தவர் ரஜினி என கூறும் முக்தா சுந்தர், ரஜினியையும், கமலையும் ஒப்பிட்டு ஒரு வாசகத்தை குறிப்பிடுகிறார்.

 

”திரையுலகில் கமல் உழைப்பாளி…ரஜினி போராளி…”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.