புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சிவா மற்றும் வசந்தா என்ற தம்பதி. இவர்களுக்கு 27 வயதில் விஷ்ணு என்ற மகன் இருக்கிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தனது தாயோடு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஷ்ணு வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வசந்தாவை சரமாரியாக குத்தியிருக்கிறார். இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சைக்குப்பிறகு வசந்தா வீடு திரும்பிய நிலையில் மீண்டும் வசந்தாவின் கழுத்தில் இரத்த கசிவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக வசந்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வசந்தாவின் கணவர் சிவா அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஷ்ணுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







