மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்க ஆரம்பித்தது. அதன்பிறகு நாள்தோறும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது நாள்தோறும் 30,000 என்ற அளவில் பாதிப்பு பதிவானது. ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதியுற்றனர்.
இந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதனால், ஊரடங்கு பெரும்பாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சில நாடுகளில் கொரோனா தொற்று 3ஆம் அலை தொடங்கிவிட்டது. கொரோனா அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை, அது யூகம் தான் என்ற அமைச்சர்,
மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு ஆக்சிஜன் வசதிகளுடன் 70 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார். இதுவரை 1,736 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டிற்கு 6,45,000 தடுப்பூசிகள் இன்று வந்தடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.







