டீ சாப்பிடுவது என்பது உணர்வோடு கலந்த ஒன்று. வேலை களைப்பு நீங்க டீ குடிப்பது என்பது போய் டீ கடை அரட்டைகள் அரசியல் விவாதங்களாக மாறிய ஊர் நம்ம ஊர். விழாக்கள், துக்க நிகழ்வுகள், பயணங்கள், இப்படி எல்லாவற்றிலும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும் டீ ( தேநீர்), அதை விற்பவர்களின் வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சிலருக்கு டீ என்பது சுவாசம், சாப்பிடாமல் டீயை மட்டும் குடித்துக் கொண்டே ஒரு நாளையே ஓட்டி விடுவார்கள். அப்படியானவர்கள் இரண்டு ரகம். ஒன்று வறுமையினால் டீ குடித்து வயிரை நிரப்புபவர்கள். மற்றொன்று டீ குடித்தால்தான் வேலையே ஒடும் என்பவர்கள்.

இந்த முதல் ரகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களுடைய பொருளாதாரத்திற்கு கட்டுபடி ஆகும் உணவு பொருள் என்றால் அது டீ தான். இன்று அதன் விலையும் டிகிரி டிகிரியாய் எகிறி இருக்கிறது. ‘டீ’ ஏழைகளின் பானம் என்று பலர் சொல்வதுண்டு.
ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு பலரை வீட்டிற்குள் முடக்கி போட்டது. முன்களப் பணியாளர்கள் வேலைக்கு சென்றபோது உணவு கிடைப்பதில் எழுந்த சிக்கலை விட, குறைந்தபட்சம் டீ கூட கிடைக்கவில்லை என்பது தான் பெரும் சிக்கல்.
தேனீர் கடைகள் இயங்கவில்லை என்பதால், தேனீருக்கான தேடல் அதிகமானது. உணவு விநியோகம் செய்யும் செயலிகள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமே பரிட்சயமாக இருக்கிறது. அத்தகைய அனுபவமுடையோர் செயலி மூலம் டீ வாங்கி அருந்துகிறார்கள். சாதாரண மக்களின் பொருளாதார சூழலில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு கிடைத்து வந்த 10 ரூபாய் டீ கூட இப்போது அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. அவர்களுக்கு தேனீர் வழங்குபவர்களாக இருப்பது கேன் டீ விற்பவர்கள்தான்.

இந்த கொரோனா ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கி உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான காலக்கட்டத்திற்கு ஊரடங்கு தேவை என்பது ஒருபக்கம் இருந்தாலும், ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டுக்கொண்டே இருக்கிறது.
இதுவரையில் டீ வாங்கி குடித்து வந்தவர்கள் பலர் இப்போது கேன் டீ விற்கும் தொழியில் இறங்கி உள்ளனர். வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாததால், இத்தொழிலுக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கோடம்பாக்கத்தில் கேன் டீ விற்கும் மணியிடம் , டீ வியாபாராம்லாம் எப்படி போகுது? என்று ஒரு டீ சாப்பிட்டுக் கொண்டே பேசினோம். ” நான் 10 வயதிலிருந்து டீ விக்கிறேன். கொரோனா ஊரடங்குக்கு முன்புவரை ஒரு ஹோட்டல்ல தான் வேலை செய்தேன். இந்த ஊரடங்கு தொடங்கியதும் வேலையில்லாமல் போனது. வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

என்னிடம் சைக்கிள் இருந்தது. டீ கேன்களும் இருந்தன. அதை வைத்து டீ விற்கலாம் என்று முடிவு செய்தேன். சாதாரண மக்களுக்கு எங்களை போன்றவர்கள்தான் டீ கொடுக்க முடியும். ஒரு டீயின் விலை ரூபாய் 10-க்கு விற்கிறேன். காலையில் 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். நானும் என் மனைவியும் இணைந்து டீ போட்டு, கேனில் அதை ஊற்றுவோம். காலை 5 மணி முதல் 12 மணிவரை கோடம்பாக்கம், லிபர்ட்டி சாலை, சூளைமேடு என்று எல்லா இடத்திலும் சுற்றி சுற்றி டீ விற்பேன். காவல்துறை சில நேரங்களில் கெடுபிடி காட்டுவார்கள். கூட்டம் கூடாம ஆங்காங்கே தனிநபர் இடைவேளையோடு டீ விற்க மட்டும் அரசு அனுமதி கொடுத்தா நல்லாருக்கும். இனி ஊரடங்கு தளர்வுகள் வந்திடுச்சுனா இந்த பொழப்பு போயிடும். டீ கடைகள் திறந்திட்டா எங்களுக்கு வியாபாரம் பாதிக்கும்” என்று வருத்தத்தோடு பகிர்ந்துக் கொண்டார்.
இதுபோலவே சூளைமேட்டில் கேன் டீ விற்கும் இளைஞர் (பெயர் குறிப்பிட அவர் விரும்பவில்லை) “காவல்துறையினருக்கு மாமுல் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இதுவரை மூன்று முறை அபராதம் கட்டிவிட்டேன். வாழ்வாதரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல்தான் கேன் டீ விற்கிறேன். என்னிடம் பணக்காரர்கள் வந்து டீ குடிப்பதில்லை. ஏழை எளிய மக்கள்தான் டீ குடிக்கிறார்கள். நான் டீ கடை சொந்தமாக நடத்தி வந்தேன். ஊரடங்கால் டீ கடை திறக்க முடியவில்லை. எங்களது கடையை நம்பி 4 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் தர வேண்டும். ஊரடங்குக்கு முன்புவரை டீ மாஸ்டருக்கு தினமும் 700 ரூபாய், கேஷியருக்கு 500 ரூபாய், வாடகைக்கு 20,000 ரூபாய் கொடுக்கும் அளவுக்கு வருமானம் வந்தது.
ஊரடங்கால் எல்லாம் பாதிக்கப்பட்டு விட்டது. டீ கடை நடத்தி வந்த நான் இப்போது கேன் டீ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். இதனால் கூடிய விரைவில் டீ கடை திறந்தால் நன்றாக இருக்கும் என்றவருக்கு நாம் அவரிடம் பேசிவிட்டு வந்த தினமே டீ கடைகளை திறக்க அரசு அனுமதித்து வெளியிட்ட செய்தி உற்சாகத்தை தந்திருக்கும்.

இதுபோல் சூளைமேட்டில் தனது வீட்டிற்கு வெளியில் கேன் டீ விற்கும் மதுரையை சேர்ந்தவரிடம் பேசியபோது, ‘ கொரோனா ஊரடங்குக்கு முன்புவரை தள்ளு வண்டிக் கடையில் சிக்கன் பக்கோடா, ஆட்டுகால் சூப் போட்டு வியாபாரம் செய்தேன். சிறுவயதிலே சென்னைக்கு வந்துவிட்டேன். முதலில் பால் விற்றேன். பின்பு பக்கோடா கடை வைத்து வயிற்றுப்பொழைப்பை பார்த்து வந்தேன். தற்போது ஊரடங்கால் பக்கோடா கடை போட முடியாது. வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கேன் டீ விற்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு 3 லிட்டர் டீ போடுவேன். காலை 5 முதல் 10 வரை விற்பேன். மாலை 5 முதல் 7 வரை விற்பேன்’என்றார்.
ஒட்டலில் வேலை செய்தவர், டீ கடை வைத்திருந்தவர், பக்கோடா கடை வைத்திருந்தவர் என வெவ்வேறு வேலையை செய்திருந்தவர்களை இந்த ஊரடங்கு டீ விற்க கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒரு தேனீர் உரையாடலில் பலரது வாழ்க்கையே மாறி இருக்கிறது. இப்படி இவர்கள் வாழ்க்கையில் இந்த தேனீர் கொண்டு வரப் போகும் மாற்றங்கள் என்ன என்ற மிகப் பெரிய கேள்வியோடு தான் அவர்கள் அன்றாடம் தேனீர் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளில் கேன் டீ விற்பவர்களின் நிலை இப்படி இருக்க. டீக் கடை, சாலையோர கேன் டீகாரர்களுக்கு தற்போது அச்சுறுத்தலாக வந்துள்ளது, டீ பிசினஸ்க்கு நிறைய கார்ப்பரேட்கள் மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ் கணக்கில் களத்தில் புதியதாக இறங்கி இருப்பது. அவர்கள் யார்?
-வாசுகி
( டீ ப்ரேக் )







