திண்டுக்கல் அருகே சொத்துத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாறி, மாறி தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை கிராமத்தை சேர்ந்த சின்னையாவுக்கும், அவரது 3வது மகனான லூர்துராஜுக்கும் சொத்துகளை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. லூர்துராஜ் இதுகுறித்து தனது தந்தையிடம் அடிக்கடி வாதம் செய்துள்ளார். நேற்றும் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த லூர்துராஜ், தனது தந்தை சின்னையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். சின்னையாவும், அவரது குடும்பத்தினரும் பதிலுக்கு லூர்துசாமி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதை அருகில் இருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய லூர்துராஜை தேடி வருகிறார்.








