நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்தார். ஆனால் உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
இந்நிலையில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் கரப்பான் பூச்சி கட்சியினர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை நடத்தினர். ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணியைத் தொடங்கிய கரப்பான் பூச்சி கட்சி ஆதரவாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் நுழைவு வாயில் பகுதிக்கு அருகே வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கதவுகள் மூடப்பட்டு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. இதில் பலரும் காயமடைந்தனர். மேலும் கரப்பான்பூச்சி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கரப்பான் பூச்சி கட்சியினர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அமைச்சர் ஜே.பி.நட்டா-வை சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தனர். அதில், “ நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும், சீரழிந்த கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.




