ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட இயக்குநர் ‘ராம்’ , ‘நடிகர் நிவின்’ பாலியை வைத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ‘அஞ்சலி’ கதாநயகியாகவும், தற்போது ஹீரோவாக கலக்கும் ‘சூரி’ முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

‘வீ ஹவுஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குநர் ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 2024-ஆம் ஆண்டு ‘இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் ராட்டர்டாம்’ (IFFR) விழாவில் ‘பிக் ஸ்கிரீன்’ (Big Screen) பிரிவில் திரையிடப்பட்டு, பெரும் பாராட்டுக்களைப் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு ஏழு கடல் ஏழு அமலை படத்தின் ‘ஏழேழு கடல்’, ‘மறுபடி நீ’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் படபிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக ரிலீசாகாமல் இருந்தது. இந்த நிலையில் இயக்குநர் ராமின் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் இப்படம் ‘அக்டோபர் 1-ஆம்’ தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக கட்சி அமைப்பில் வெளியான டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.