டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பேரணி சென்ற CJP அமைப்பினர் மீதான காவல்துறையின் அடாவடித்தனம் கண்டிக்கதக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டிருந்த CJP அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அடாவடித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.

அவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது. ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல், நாட்டின் தலைநகரம் உட்பட நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

நாட்டு இளைஞர்களின் கோரிக்கை தெளிவானது. அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.