நீதிமன்ற தீர்ப்பால் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் – முழு லிஸ்ட் இதோ!

இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்பால் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து…

இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்பால் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக தெரிகிறது.

அதனடிப்படையில் , பாஜக எம்எல்ஏ-வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம்!

இதேபோல், இந்தியாவில் இதுவரை நீதிமன்ற தீர்ப்பால் நாடாளுமன்ற பதவியில் இருந்து  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள் பின்வருமாறு:

1. ரஷீத் மசூத் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 2013 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்றார். இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

2. லாலு பிரசாத் யாதவ் – ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான இவர், 2013 ஆம் ஆண்டு கால்நடைத் தீவன வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

3. டி.எம்.செல்வகணபதி – திமுகவை சேர்ந்த இவர், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் செய்ததாக 1997-ல் தொடரப்பட்ட வழக்கில், 2014 ஆம் ஆண்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

4. ஆசம் கான் – ராம்பூர்  தொகுதியில் எம்.பி ஆக இருந்த இவருக்கு, 2019 ஆம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவின் எதிரொலியாக எம்பி பதவியில் இருந்து தகுது நீக்கம் செய்யப்பட்டார்.

5. முகம்மது ஃபைசல் – காங்கிரஸை சேர்ந்த லட்சத்தீவு எம்.பி ஆன இவருக்கு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் கொலை முயற்சி வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  பின்னர், அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து எம்பி பதவியை திரும்பப் பெற்றார்.

இதேபோல் சில சட்டமன்ற உறுப்பினர்களும், நீதிமன்ற தீர்ப்பால், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா – 2001 ஆம் ஆண்டு, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சமாஜ்வாடி எம்.எல்.ஏ ஆன அப்துல்லா ஆசம் கான், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசத்தில் நடந்த மாநில நெடுஞ்சாலை போராட்டத்தின்போது, பொது ஊழியர் ஒருவரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2013 ஆம் ஆண்டு மொராதாபாத் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப் பெற்றார். இதையடுத்து அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.