உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி என அறிந்த திரை இசைக் கவிஞர்கள் மத்தியில் ஒரு சில பாடல்களால் இன்றும் நினைவில் நிற்கின்றனர் சில கவிஞர்கள். பெயர் தெரியாத, அதிகம் அறிமுகம் இல்லாத அந்த கவிஞர்கள் தந்த இலக்கிய நயம் மிகுந்த வரிகள் நிறைந்த பாடல்கள் இன்றும் நம்மை முணுமுணுக்க வைக்கின்றன.
அப்படி ஒரு பாடல் தான் ‘சின்ன சின்ன மூக்குத்தியாம்’. பாதை தெரியுது பார் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன மூக்குத்தியாம் பாடலை எழுதியவர் கே.சி.எஸ்.அருணாசலம் என்ற கவிஞர். டி எம் சௌந்தரராஜனின் மெய்மறக்க வைக்கும் குரலில் சின்ன சின்ன மூக்குத்தி செவியில் விழுந்து இதயம் நுழைகின்றது. ‘வெற்றிலை போட்டால் வாய் சிவக்கும், கன்னம் வெட்கத்தினாலே சிவக்கும்’ என்ற வரிகளும் முத்து சிரிப்பில் மறைந்திருக்கும் என்ற வரிகளும் இசை பாட வைக்கின்றன.
இடதுசாரி இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர் என்பதால் அருணாசலத்தின் திரைப்பயணத்திற்கு பலர் தடைக்கல்லாக இருந்ததாக கூறப்படுகிறது. ஓரிரு பாடல்கள் எழுதினாலும் ஒற்றைப் பாடலால் வானுயர நிமிர்த்து நிற்கிறார் அருணாசலம்.
1958ஆம் ஆண்டு எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி நடித்து வெளியிட்ட ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் ‘உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா என்ற பாடல் உழைப்பின் மேன்மையை பேசுவதால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் என்றே பெரிதும் கருதப்படும் நிலையில் பாடலை எழுதியவர் கவி லட்சுமணதாஸ் என்பவர் என்றால் வியக்கவைக்கும். எம்ஜிஆரின் சிந்தனைக்கு ஏற்றவாறு ஆழமான கருத்துகள் கொண்ட பாடலை எழுதி உள்ளார் கவி லட்சுமணதாஸ் . கல்லாத மக்களை கல்வி அறிவு பெற வைப்பதில் தான் பெருமை உள்ளது என்ற வரிகள் அன்றே முழங்கியுள்ளன.
உழைக்கும் மக்களை கொண்டாடும் பாடல் வரிகளை எழுதினாலும், காதல் நயமிக்க வரிகளை எம்ஜிஆர் நடித்த தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்தில் ஆஹா நம் ஆசை நிறைவேறுமா என்ற பாடலில் தந்திருப்பார் கவி லட்சுமணதாஸ். சின்ன சின்ன மூக்குத்தியாக ஜொலித்தாலும் நம்ஆசை நிறைவேறுமா என கேட்கும் பாடல் வரிகளால் மறக்க முடியாதவர்களாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் கவிஞர்கள் சிலரும் உள்ளனர்.








