தீவிரமடையும் ‘அக்வான்’ புயல் – எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவான ‘அக்வான்’ புயல் இன்று தீவிர புயலாக உருவாகக்கூடும்.

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலவும் “அக்வான்” (Akvan) புயலானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று காலை 05:30 மணி நிலவரப்படி, இது அதே பகுதியில், அதாவது 12.2° வடக்கு அட்சரேகை மற்றும் 85.7° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இது சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே சுமார் 610 கி.மீ தொலைவிலும், திருகோணமலைக்கு (இலங்கை) வடகிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 790 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 17 நவம்பர் 2026 மாலை வாக்கில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ‘தீவிர புயலாக’ (Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 19 நவம்பர் காலை வாக்கில் ‘மிகத் தீவிர புயலாக’ (Very Severe Cyclonic Storm) மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், 20 நவம்பர் 2026 நண்பகல் வாக்கில், நெல்லூர் மற்றும் துனி (Tuni) பகுதிகளுக்கு இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரையை கடக்கக்கூடும். அப்போது இது ‘மிகத் தீவிர புயலாக’ இருக்கும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.