முக்கியச் செய்திகள் தமிழகம்

மேகதாது பிரச்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ள நிலையில், அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறது கர்நாடகா. இந்நிலையில், அம்மாநிலத்தில், கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக பெங்களூருவுக்கு வருகை தந்த மத்திய நீர்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷாகாவத்துடன், முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகாவின் அனைத்து கோரிக்கைகளும் மத்திய அரசிடம் மனுவாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகதாது அணை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி கர்நாடக அரசு முறையிட்டிருப்பதாகவும், இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்த கஜேந்திரசிங் ஷெகாவத், இந்த விவகாரத்தில் கர்நாடகாவிற்கு நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மேகதாது அணைகட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டின் பல இடங்களிலும், புதுச்சேரியிலும் போராட்டங்கள் நடைபெற்றன. காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடகா கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தின்போது, எடியூரப்பாவின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதேபோல், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காவேரி உரிமை மீட்பு குழு சார்பில், புதுச்சேரியில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கர்நாடக மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதோடு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

மேகதாது அணை விவகாரத்தில், ஆலோசித்து முடிவு எடுக்கப் போவதாக மத்திய அரசு கூறி உள்ள நிலையில், அந்த முடிவு எத்தகையதாக இருக்கும் என்பதே இந்த விவகாரத்தில் மிக முக்கிய கேள்வியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது; அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

Saravana

சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்

Arivazhagan Chinnasamy

தமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

Gayathri Venkatesan