கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மிகுந்த விருப்பத்துடன் தனது மீசையை வளர்த்து வருகிறார்.
பொதுவாக பெண்களுக்கு ஆண்களைப்போல் மீசை முளைப்பதில்லை என்பது எவ்வளவு எதார்த்தமோ அதே அளவு யாதார்த்தம் அவர்கள் மீசையை விரும்புவதில்லை என்பதும்.
ஒரு சில பெண்களுக்கு மீசை சற்றே வளர்ந்தாலும் அதை அகற்றிவிட அவர்கள் எடுக்கும் முயற்சியை உலகம் அறியும்.
முடி அகற்றும் பொருட்களுக்கான உலகச் சந்தை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது, விதவிதமான கிரீம்கள், ரேஸர்கள் என பல வகையான தீர்வுகள் சந்தையை ஆக்கிரமித்திருக்கின்றன.
எனினும், விதிவிலக்காக பெண்களில் சிலர் தங்களுக்கு வளரும் மீசையை பெருமிதமாகக் கருதி, அதனை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷைஜா.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நான் எனது மீசையை விரும்புகிறேன் என கூறுகிறார்.
பெண்ணுக்கு மீசை எதற்கு என என்னிடம் கேட்பவர்களிடம் நான் கூறுவது, அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதுதான் என்கிறார் ஷைஜா.
அழகு நிலையங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஷைஜா, தனது புருவங்களை அடிக்கடி திரித்துக்கொள்கிறார். எனினும், தனது மீசையை அகற்ற வேண்டும் என்று தான் ஒருபோதும் எண்ணியதில்லை என்கிறார் அவர்.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரியும்படியாக மீசை தடிமனாக வளரத் தொடங்கியதாகக் கூறும் ஷைஜா, அது தனக்க மிகுந்த மகிழ்ச்சியை தந்ததாகக் கூறுகிறார்.
மீசையை அகற்றுமாறு பலர் கூறியபோதிலும் அதனை தான் ஒருபோதும் செய்யவில்லை எனக் கூறும் ஷைஜா, மீசை இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது என்கிறார்.
மீசை இருப்பதால் தான் அழகாக இல்லை என்றோ அல்லது அது தன்னிடம் இருக்கக்கூடாத ஒன்று என்றோ தான் கருதியதில்லை என தெரிவிக்கும் ஷைஜா, எனக்கு விருப்பமானதை நான் செய்கிறேன் என்றும், எனக்கு இரண்டு உயிர்கள் இருந்தால், நான் மற்றவருக்காக ஒன்றை வாழ்ந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.
திருமணத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் ஷைஜா, கேரளாவைவிட தமிழ்நாட்டில் கூடுதல் சுதந்திரத்தை உணர்வதாகக் கூறுகிறார்.
எது அழகு என்பது குறித்த பார்வை எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற புரிதல் சமூகத்தில் வளர்ந்து வருகிறது என்பதையே ஷைஜாவின் மகிழ்ச்சி வெளிப்படுத்துகிறது.
உடல் எப்படி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் எனும் கருத்தை கடந்த 2016ம் ஆண்டில் இருந்து பிரச்சாரம் செய்து வருகிறார் ஹர்னாம் கவுர்.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண் சீக்கிய ஆண்களைப் போலவே முழு தாடியை வளர்த்து வருகிறார்.
தன்னை நேசிப்பது என்பது தனது முகத்தில் வளரும் முடியையும் சேர்த்து நேசிப்பதாகும் என கூறும் ஹர்னாம் கவுர், மாற வேண்டியது பிறரது பார்வைதான் என்கிறார்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது அர்த்தம் பொதிந்த வாசகம் என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் இருக்க முடியும்.










