நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில், தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும். 9 மணிக்கு OMR தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், செல்போன்கள் மற்றும் இதர பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனக் கூறியுள்ளது.
தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும், இடதுகை பெருவிரல் ரேகையை OMR தாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும், OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது, OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், OMR தாளில் ஒரு கட்டத்தைத் தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களைத் தேர்வர்கள் விடைகளாகக் குறிக்கக்கூடாது எனவும், விடை தெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் Shade செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.







