கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இம்மாத தொடக்கத்தில் கேரளா திரும்பி உள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த 6ம் தேதி மலப்பரத்தில் உள்ள மஞ்சரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில், அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதனை தெரிவித்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இம்மாத தொடக்கத்தில் கேரளா திரும்பிய நபர் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூலை 14ம் தேதி அவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறையினருக்கு உதவுவதற்காக தேசிய நோய் தடுப்பு மையத்தில் இருந்து நிபுணர்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, கேரளாவின் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது ஆண் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. அவர் துபாயில் இருந்து கடந்த 13ம் தேதி கர்நாடகாவின் மங்களூருக்கு வருகை தந்துள்ளார்.
அவருக்கு குரங்கு அம்மை நோயின் அறிகுறி இருந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மூன்றாவது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நோய் பெரும்பாலும் ஆண்களை மட்டுமே தாக்குவதாகவும், அதிலும் குறிப்பாக ஆண் – ஆண் பாலியல் உறவில் இருப்பவர்களே இதனால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும், நடுத்தர வயது கொண்டவர்கள்தான் குரங்கம்மையால் பாதிக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அதிக காய்ச்சல், உடலின் பல பகுதிகளில் கொப்புளங்கள் ஆகியவையே இதன் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.









