‘மத்திய அரசு இபிஎஸ்-ஐ மட்டுமே அங்கீகரித்துள்ளது’ – ஆர்.பி.உதயகுமார்

மத்திய அரசு இபிஎஸ்-ஐ மட்டுமே அங்கீகரித்துள்ளது எனச் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள…

மத்திய அரசு இபிஎஸ்-ஐ மட்டுமே அங்கீகரித்துள்ளது எனச் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோவிலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு தி.மு.க. அரசு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ்-யிடம் பலகட்ட பேச்சுவார்த்தையை மூத்த நிர்வாகிகள் நடத்தியதாகவும், அவர் அதனை உதாசீனப்படுத்தியதால், தற்போது அவர் அரசியலில் தனித்து இருப்பதாகக் கூறினார்.

உண்மையான அதிமுக நாங்கள்தான் என நிரூபிக்கும்வகையில் 75 மாவட்டங்களிலும் வருகிற 25-ஆம் தேதி திமுக ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்த அவர், தேனியில் 26-ஆம் தேதி போராட்டம் நடைபெற இருப்பதாகக் கூறினார். மேலும், வரும் காலங்களில் துரோகத்திற்கும், எதிரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘குரூப் 4 தேர்வு; தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன?’

குடியரசுத் தலைவர் பிரிவு உபசார விழாவிலும், குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு நிகழ்விலும் அதிமுகவின் ஒற்றை முகமாக, அதிமுகவின் பொதுச்செயலாளராகக் கலந்து கொள்ள மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், ஒன்றரை கோடி கட்சி தொண்டர்களின் இதயமாக விளங்கும் தலைமை கழகத்தைக் காலணியால் உதைத்தனர் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவும் இதற்கு உடந்தையாக இருந்ததாகச் சாடினார். அதன் அடிப்படையில், வருவாய்த்துறை மூலம் சீல் வைத்ததாகக் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது எனத் தெரிவித்த அவர், கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவாக உள்ளது எனவும், இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.