அண்ணாத்தா திரைப்படத்தில் ரஜினியின் சகோதரிகளாக நடிகை மீனா, நடிகை குஷ்பூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நடிகைகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று நெட்டீசன்கள் சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
1984-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த், ‘ரஜினி அங்கிள்’ என்ற குரலையும் நடிகை மீனாவின் அந்த மழலை முகத்தையும் நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இதற்கு முன்னதாக 1982-ல் வெளியான ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் மீனா நடித்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படி நடித்த மீனா 1993-ம் ஆண்டு வெளியான ‘எஜமான்’ படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘வீரா’, ‘முத்து’ போன்ற படங்களிலும் காதாநாயகியாக நடித்தார்.
ரஜினி- மீனா ஜோடி நடித்த ‘முத்து’ படத்தில் பாடல்கள் முதல் நகைச்சுவை காட்சிகள்வரை அனைத்துமே உலகத்தின் அனைத்து மூலைகளிலும் சென்று சேர்ந்தது.
இதுபோலவே நடிகை குஷ்பூ 80-களில் தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன், பாண்டியன் போன்ற படங்களில் ரஜினிகாந்துடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ 29 வருடங்கள் கழித்தும், நடிகை மீனா 26 வருடங்கள் கழித்தும் நடிகர் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்தா’ படத்தில் இணைந்தனர். அவர்களது கதாபாத்திரங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் இருவரும் ரஜினிகாந்தின் சகோதரிகளாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகர்கள் எந்த வயதிலும் ஹிரோவாகவே தொடர்வதும், கதாநாயகிகளுக்கு மட்டும் வயதாவதும் தமிழ் சினிமாவில் மாறாதா பாஸ் என்று நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். இருப்பினும் நடிகை மீனா, நடிகை குஷ்பூ இருவரும் இன்னும் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எந்த உறுதியான தகவலும் இன்னும் வெளியாகவில்லை.