”பிகார் பயணம் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” – அன்புமணி ராமதாஸ்!

பிகார் பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் பிகாரில் மேற்கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சிகள் கடந்த ஆகஸ்ட் 17 முதல்  வாக்குரிமை பயணத்தை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இன்று பிகாரில் நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பிகார் பயணம் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிகாருக்கு சென்றுள்ளார். புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பிகாரின் புத்த கயாவில் தான் இருந்தது. அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பிகார் தான். இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பிகார் தான். அத்தகைய சிறப்பு மிக்க பிகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.