ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப். 23-ம் தேதி முதல் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 14வது நாளான இன்று, இந்தியா மகளிர் கபடியில் சீனாவை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் 100 ஆவது பதக்கத்தை பெற்றது இந்தியா. இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்நிலையில் இன்று கிரிக்கெட் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்தது. 10 ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 50/4 ரன்கள் எடுத்தது. அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பிஷ்னோய் தலா 1 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய்- ஜிதேஷ் ஷர்மா இணைந்தி 1 ரன் அவுட்டினையும் செய்தார்கள். 18.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் 112/5 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
பின்னர் மழை நிற்காத காரணத்தினால் போட்டி ரத்தானது. புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றிருந்த நிலையில் ஆடவர் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.







