2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 43 மக்களவை தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 10 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றி அன்றைய காங்கிரஸ் ஆட்சியமைக்க முக்கிய பங்காற்றியது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் மொத்தமாகவே 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை என 2 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
1982 முதல் 2011 வரை ஆட்சி செய்த மேற்குவங்கத்திலும், 1978 முதல் 1988 வரையிலும் பின் 1998 முதல் 2018 வரையிலும் கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆட்சி செய்த திரிபுராவிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியை இழந்தது. 2016 -2021 காலகட்டத்தில் தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலே கம்யூனிஸ்ட்கள் இல்லாத சட்டப்பேரவையாகச் செயல்பட்டது. கம்யூனிஸ்ட்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் கருணாநிதிக்கு இருந்தாலும் அப்போது அவர் கூறிய கூற்று மிகவும் கவனிக்கத்தக்கது ‘கம்யூனிஸ்ட்கள் இல்லாத சட்டமன்றம் வருத்தமளிக்கிறது’ என்றார். ’மக்கள் செல்வாக்கை இழந்த மார்க்சிஸ்ட்கள்’ என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகின.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்று உயர் சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு மார்க்சிஸ்ட்களின் ஆதரவு நிலைப்பாட்டை அக்கட்சியினர் பலரும் எதிர்த்தனர். கம்யூனிஸ்ட்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காதவரைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று கடந்த கால சறுக்கல்களையும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது.
விமர்சனங்கள்:
1.பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளரைக் களமிறக்கத் தயங்குவது.
2. மாவட்ட, மாநிலச் செயலாளராகப் பெருவாரியாகப் பெண்களை நியமிக்காதது.
3.பொலிட் பீரோ உறுப்பினர்களாகப் பழங்குடி பட்டியலின சமூகத்தினர் இடம் பெறாதது.
4.இளைஞர்கள், புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்காதது.
5.இட ஒதுக்கீடு விவகாரம்
6.தேர்தலில் பெண்களுக்கு 33% வழங்காதது.
என நீண்ட நெடிய விமர்சனங்கள் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில் சில மாற்றங்களை முன்னெடுக்கத் துவங்கியது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல் என இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் 21 வயது பெண்மணியான ஆர்யா ராஜேந்திரனைத் திருவனந்தபுர மேயராக தேர்வு செய்து இந்தியாவில் மிகக்குறைந்த வயது மேயர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறச் செய்தது. கேரளாவில் முக்கிய துறையான சுகாதாரத் துறையை சரோஜா டீச்சருக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட முன்னெடுப்புகளை செய்தது. கடந்த மாதம் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தமிழ் மாநில மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினர்களாக அதிக இளைஞர்களும் 17 புதியவர்களும், 15 பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடர்பாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையச் செய்து கொண்டிருக்கும் வேளையில்தான் ஏப்.6 முதல் ஏப்.10 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்றது. மாற்றங்கள் பல கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கிய தீர்மானங்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் மூன்றாவது முறையாகக் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். அவருடன் திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு (பெலிட் பீரோ) உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். 2 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தாலும். இதுவரை இல்லாத முதன்முறையாக பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திர தோம் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னெடுப்பு மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டுமே மார்க்சிஸ்ட் பொலிட் பீரோவில் இடம்பெறுகின்றனர் என்ற நீண்ட கால விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளியாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
ராமச்சந்திர தோம்:
மேற்கு வங்கம், பிர்பூம் மாவட்டத்தில் பிறந்த இவர், முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிர்பூம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்வானார். தொடர்ச்சியாக 1991, 1996, 1998, 1999, 2004, 2009 என 6 முறை மொத்தம் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு ஆளுமை, பொலீட் பீரோ உறுப்பினராகத் தேர்வான பிறகு அவர் பேசுகையில் ‘ நான் ஒரு கம்யூனிஸ்ட், நான் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் ‘தலித்’ என்ற அடையாளத்தில் என்னை ஒருபோதும் கருதிக்கொள்ள மாட்டேன். கட்சி எனக்கு எதைச் சொல்கிறதோ அதன்படியே நான் செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பைக் கொண்டாடும் வேளையில் துணை கேள்வியாக ஒன்றும் விமர்சகர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.
பிர்பூம் நாடாளுமன்றத் தொகுதி 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தனி தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 1989, 1991, 1996, 1998, 1999, 2004 என ஆறு முறை அதாவது 20 ஆண்டுகள் மக்களவை உறுப்பினரான ராமச்சந்திர தோம் தொகுதியின் செல்லப்பிள்ளையாக அனைவருக்கும் பரிட்சையமானவர். 2009 ஆம் ஆண்டு பிர்பூம் தொகுதி பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் அங்குக் களமிறக்கப்படாமல் அருகே உள்ள போலாப்பூர் (தனி) தொகுதியில் களமிறக்கப்பட்டார். அங்கும் வெற்றி பெற்றார் என்றாலும் ஏன் அவரை பிர்பூம் தொகுதியிலே களமிறக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த பாலபாரதிக்கு மீண்டும் அந்த தொகுதியில் வாய்ப்பளிக்கவில்லை. 3 முறைக்கு மேல் ஒருவருக்கு வாய்ப்பளிக்க மாட்டோம் என்று கூறிய தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். ஆனால் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாஸ் தொடர்ச்சியாக 9 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது உள்ளிட்ட விமர்சனங்களும் உள்ளன.
மார்க்சிஸ்ட்கள் மீதான கடந்த கால விமர்சனங்களை தற்போது களையச் செய்து புதிய முன்னெடுப்புகளை எடுத்திருப்பது வரவேற்க தக்கத்து என்றும் வரும் காலங்களில் வீரியமாக முன்னெடுக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எழுத்து – மா. நிருபன் சக்கரவர்த்தி









