முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

கலையும் அரசியலும் சந்திக்கும் வண்ணக் கோடுகளின் அடையாளம் ஓவியர் ரவி பேலெட்


நேர்காணல் நிகழ்த்தியவர் மரிய ரீகன் சாமிக்கண்ணு

ஓவியர் ரவி பேலெட் தமிழ்நாட்டு ஓவிய மரபில் மிக முக்கியமான ஓவிய ஆளுமை. சமூக பிரச்னை சார்ந்து இவர் வரைந்த பல ஓவியங்கள் தமிழ்நாட்டில் கவனம் ஈர்த்துள்ளன. சிறுபத்திரிகை தொடங்கி பெருநிறுவனங்கள் வரை பல முன்னணி இதழ்கள், பத்திரிகைகளுக்கு இவர் வரையும் ஓவியம் தனித்துவம் மிக்கது. இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த ஓவியர் சந்தோஷ் நாராயணனின் தமிழணங்கு ஓவியத்தால் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்றது. அதனையொட்டி, ஓவியர் ரவி பேலெட் உடன் ஒரு சிறிய உரையாடல் நிகழ்த்தப்பட்டது. அதன் எழுத்து வடிவம் தற்போது.

மரிய ரீகன் : ஓவியர் சந்தோஷ் நாராயணனின் தமிழணங்கு ஓவியம் தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்வையொட்டி பேசு பொருளாகியுள்ளதே. ஒரு ஓவியராக இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓவியர் ரவி: பொதுவாகவே, தமிழ் சமூகம் பேச்சு சமூகம் தான். பேச்சு மூலமாக மட்டுமே தமிழ் சமூகம் வளர்ந்து வந்துள்ளது. ஓவியம் தொடர்பான கலை வெளிப்பாடு மிகவும் குறைவு. தற்போதைய காலக்கட்டத்தில் யாருமே இதுபோன்ற உரையாடலை செய்வது இல்லை. ஓவியர் டிராஸ்கி மருது சார் போன்றோர் செய்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் கூட அந்த படத்தை போட்டு பல ஆண்டுக்கு மேல் ஆகிறது. அப்போது யாரும் அதை பொருட்படுத்தவில்லை. ஒரு பிரபலம் அதை பயன்படுத்தும் போது தான் பேசு பொருளாகுகிறது. அதன் பிறகு தான் அதைப்பற்றிய ஒரு உரையாடல் நடக்கிறது. பிரபலம் சொல்லலனா அதை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். கலை சார்ந்து தீவிரமாக இயங்குபவர்களை தமிழ் சமூகம் பொருட்படுத்துவதே இல்லை. எழுத்தாளர்களை கொண்டாடுவார்கள், அவர்களைப் பற்றி பேசுவார்கள் ஆனால், ஓவியர்களை யாரும் கொண்டாடுவது இல்லை.

மரிய ரீகன் : அரசியலுக்கும் ஓவியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதா?

ஓவியர் ரவி: இருக்கிறது. ஆனால், நம்முடைய நாட்டில் குறைவாக இருக்கிறது. இந்தியாவில், அரசியல் புரிதல் ஓவியர்களுக்கு இல்லை. அப்படி இருந்தாலும், அதை வெளிப்படுத்துகிறார்களா என்பது சந்தேகம். பணம் இருந்தால் செய்வோம். இல்லை என்றால் செய்ய தேவையில்லை என்ற மனோபாவம் வந்துவிட்டது. எல்லா துறைகளையும் போல ஓவியத்துறையிலும் இது இப்போது தாக்கம் செலுத்துவிட்டது. பெரும்பாலும், அரசியல் சார்ந்து உணர்வுகளை ஓவியர்கள் வெளிப்படுத்துவது இல்லை. கார்ட்டூன் எவ்வளவு வேல்யூவான மீடியம். இவ்வளவு பெரிய இந்தியாவுல கார்ட்டூனிஸ்டுகள் ரொம்ப ரொம்ப குறைவு. ரெண்டாவது, ஓவியத்தை எப்படி பார்க்கனும் என்ற புரிதலும் இங்கு இல்லை. இதற்கான அடிப்படை இங்கு இன்னும் வளரவே இல்லை.

சந்தோஷ் நாராயணன் போட்ட படத்தையே இங்கு எத்தனை பேர் உள்வாங்கி, புரிஞ்சி ரசிக்கிறாங்க என்பது தெரியல. அப்பவந்து, தமிழணங்கு என்ற வார்த்தையே இப்பதான் தெரியவருது. தமிழ் அன்னை எப்படி இருப்பார் என இப்பதான் தேடி பார்க்கிறாங்க. இதெல்லாம் அடிப்படையாக நமக்கு தெரிஞ்சிருக்கனும். அது இல்லாததால இப்ப பாக்குறாங்க. இப்ப தான் நிறம் சம்மந்தப்பட்ட விஷயம் வருது. ஓவியரின் ஒவ்வொரு கோடுகளும் எழுத்து வடிவம்.

அதை ஆழ்ந்து பாக்குறாங்களோ இல்லையோ, இன்னைக்கு உள்ள சூழலில், கோயில் திருவிழாவில் பங்கெடுப்பது போல் பங்கெடுக்குறாங்க. எவ்வளவு ஆழமாக அதப்பத்தி தெரிஞ்சிக்கிறாங்க, அப்படின்றது தெரியல. இது ஒரு சீசன் மாதிரி போய் முடிஞ்சிடக்கூடாது. அப்படி முடியாமல் இருந்தா நல்லா இருக்கும். அது தான் வரைபவர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும். கெணத்துல போட்ட கல்லு மாதிரி ரியாக்‌ஷனே இல்லாம இருந்தா ஒரு கட்டத்துல ஓவியர்கள் சோர்வாகிடுவாங்க. இதுமாதிரி, எல்லாம் நடக்கும் போது, ஓவியர்களுக்கு உற்சாகமாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த உரையாடல் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

மரிய ரீகன் : தமிழணங்கு ஓவியம் வரையப்பட்ட காலம் வேறு, இப்போது விவாதம் நடக்கும் சூழல் வேறு. இப்போ நடக்கும் உரையாடல் அந்த பிரச்னையை வேறு திசை நோக்கி நகர்த்திவிட்டதா?

ஓவியர் ரவி: இல்லை. அந்த பிரச்னையை தூண்டிவிட்டுள்ளது. தமிழன்னை, தமிழணங்கை பற்றி யாரும் அலட்டிக்கிட்டது கிடையாது. ஆனால், இன்னைக்கு அதுபற்றி பேசு பொருளாகி உள்ளதல்லவா. அதே போல, எதிர் தரப்பிலும் ஒரு பேசு பொருளாகுது. இந்த இரண்டு உரையாடலையும் பார்ப்பவர்கள் அமைதியாக எது சரி எது தவறு என்று கவனிக்கிறார்கள். எதோ ஒரு வகையில் எந்த ஒரு படைப்பும் அசைவை ஏற்படுத்தினாலும் அது கலைக்கான வெற்றி தான்.

மரிய ரீகன் : ஒரு படைப்பாளனின் படைப்பை சுற்றி அரசியல் கட்டப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஓவியர் ரவி: அது ஒன்றும் பிரச்னை இல்லை. சமூகத்திற்காக பேசும் படைப்பாளனுக்கு பாதுகாப்பு வேண்டும். சந்தோஷ் நாராயணன் இருக்கிறார் என்றால், அவருக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் இல்லையா? எதிர் தரப்பில் இருப்பவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பை சமூகம் தானே வழங்க வேண்டும். சமூக வலைதளங்களில் பேசிவிட்டு போவது விஷயம் இல்லை. அவருக்கு பிரச்னை வரும் போது எல்லோரும் அவர் கூட இருக்க வேண்டும். பலமான ஆட்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான், கலைசார்ந்து தீவிரமாக இயங்குபவர்களுக்கு அது பலமாக இருக்கும்.

மரிய ரீகன் : சங்க காலத்தில் இருந்து இப்போது வரை இலக்கியம் பேசும் அரசியல் என்பது நுட்பமாக உள்ளது. அதனுடைய வீச்சு என்பதும் வரலாற்றில் நேரடியாகவே பார்க்க முடிகிறது. எழுத்துக்களை விட ஓவியம் அந்த அளவிற்கு அரசியல் பேசவில்லையா? ஓவிய அரசியலை தமிழ்ச்சமூகம் அங்கீகரிக்கவில்லையா?

ஓவியர் ரவி: ஓவியத்திற்கான அங்கீகாரத்தை கண்டிப்பாக தமிழ்ச் சமூகம் கொடுக்க தவறிவிட்டது. இப்போது இல்லை. காலங்காலமாக இது நடந்துகிட்டு தான் இருக்கு. எப்படின்னா, பாரதியாரே கார்ட்டூன் வரைகிறார். அவருக்கு தெரிந்துள்ளது. காட்சி ரீதியாக ஒரு விஷயத்தை சொல்லலாம்னு அவருக்கு தெரிந்திருக்கு. அப்ப எல்லாமே எழுத்து தான். அந்த காலத்திலேயே அவர் காட்சி ரீதியிலான விஷயத்தை முயற்சி செய்து பார்க்கிறார். அந்த மாதிரியான முயற்சியை யாருமே பெருசா பார்க்கவே இல்லை. யாருமே பொருட்படுத்திக்கொள்ளவில்லை. அதைக் கண்டுகொள்ளவில்லை.

இன்னமும், தமிழ்ச் சூழலில் உலகளாவிய சிந்தனை கொண்ட ஒரு கார்ட்டூனிஸ்டே இன்னும் வரவில்லை. இவ்வளவு பெரிய ஜனத்திரள் கூட்டத்தில், ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட் இல்லையே. ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இந்த நிலை தான். ஊடகங்களோ, பத்திரிகைகளோ படைப்பாளனை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. பத்திரிகை, ஊடகங்களுக்கு ஏற்பவே செயல்பட வேண்டிய நிர்பந்தம் கலைஞர்களுக்கு உள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் இன்னும் பத்து கார்ட்டூனிஸ்ட் கூட வரவில்லை.


மரிய ரீகன் : தமிழ்ச்சமூகம் ஓவியர்களை எப்படி பயன்படுத்துகிறது?

ஓவியர் ரவி : ஓவியர்கள் மீது மோசமான பார்வை தான் உள்ளது. ஓவியர்கள் என்றால், காலெண்டர் படம் வரைபவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். சினிமாவுக்கு கட்டவுட் வரைபவர்கள், கட்சி கூட்டத்திற்கு பேனர் வரைபவர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். ஓவியர்களை ஒரு கூலியாட்களாக மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களை படைப்பாளர்களாக பார்ப்பது இல்லை. இவர்களுக்கு ஓவியர்கள் எல்லோருமே கூலித் தொழிலாளர்களே.

மரிய ரீகன் : ஓவியர் அல்போன்சா, சந்ரு, டிராட்ஸ்கி மருது, வீரசந்தானம் என்று ஒரு மரபு இருந்ததே. தற்போது அது தொடர்கிறதா? தற்போது இளம் தலைமுறை ஓவியர்களின் பங்களிப்பு தமிழ்நாட்டில் எப்படி உள்ளது? தமிழ்நாடு அரசு ஓவிய மரபை செழுமையாக்க என்ன செய்ய வேண்டும்?

ஓவியர் ரவி : தமிழ்நாடு அரசு ஓவியத்தில் நவீனத்துவத்தை புகுத்த வேண்டும். எல்லா காலத்திற்கும் ஏற்ப அப்டேட் செய்துகொள்ள வேண்டும். பள்ளியை பாருங்கள் ஓவிய வகுப்புகள் எப்படி நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அதற்கான பாடத்திட்டம் என்ன? எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. பள்ளிகளில் ஓவியத்தை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும். ஓவியத்திற்கென்று தனி ஓவிய கூடங்களை அரசு அனைத்து பள்ளிகளிலும் அமைக்க வேண்டும். கும்பகோணம், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஓவிய கல்லூரிகள் பழைய பாடத்திட்டத்தை தான் பின்பற்றுகின்றன. அதை எல்லாம் மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. காலத்திற்கு தகுந்த வகையில் ஓவியத்துறையையும் நவீனப்படுத்த வேண்டும்.

  • நன்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செல்ல பிராணிகள் வளர்த்தால் ஆபத்தா?

EZHILARASAN D

“திமுகவை எதிர்க்கும் கட்சி என்ற தகுதியை அதிமுக இழந்துவிட்டது”: திருமாவளவன்

Halley Karthik

போதை பழக்கத்திலிருந்து விடுபட… என்ன செய்ய வேண்டும்?

Arivazhagan Chinnasamy